குளித்தலை அருகே உள்ள மேலக்குறப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). இவரது மனைவி செல்லம்மாள் மற்றும் 2 மகளுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி அவர் கணவருடன் வசித்து வருகிறார். இவரது வீடு மேற்கூரை தகரத்தினாலும் கீழ்பகுதி முழுவதும் தென்னங்கீற்றாலும் அமைக்கப்பட்ட வீடாகும். தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டில் விளக்கு ஏற்றிவைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் உள்பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் முயற்சியால் தீ ஓரளவு அணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீ விபத்துக்குள்ளான வீட்டை பார்வையிட்டு விசாரித்த போது வீட்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதுபோல வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் உள்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் தீ பிடித்ததால் அந்த இடத்தில் இருந்த மின்விசிறி வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை சேதமடைந்துள்ளது. தீ எரிவதை பார்த்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெருமளவு சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.