பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பா.ஜனதாவினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட பா.ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து, மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் பேசும்போது கூறியதாவது:- சஷ்டி அன்று உண்ணாவிரத போராட்டத்தை மாநில தலைவர் அறிவித்திருக்கிறார். பொதுவாக கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். அதன்பிறகு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அதுபோல் நாம் தி.மு.க. அரசை வதம் செய்ய வேண்டும். அவர்களது முகத்திரையை கிழிக்க வேண்டும். தி.மு.க.வினர் செய்யும் அனைத்து ஊழல்களையும் பா.ஜனதா வெளிக்கொண்டு வரவேண்டும். கரூரில் லாட்டரி, கஞ்சா, 24 மணிநேரமும் டாஸ்மாக் இயங்குகிறது. இதைத்தடுக்க நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம். இதை மக்களிடம் பா.ஜனதா வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். மக்களுக்காக இயங்குகின்ற கட்சியாக பா.ஜனதா இருக்கும். தி.மு.க. அரசு செய்கின்ற அனைத்து தப்புகளையும், ஊழல்களையும் சுட்டிக்காட்டி வெட்ட வெளிச்சமாக்கின்ற தலைவராக பா.ஜனதா மாநில தலைவர் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. செயல்படுத்திய இலவச மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் தி.மு.க.வினர் ரத்து செய்துவிட்டனர். 2024-ம் ஆண்டு 400 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று, 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைக்கப்போவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜனதாவை சேர்ந்த மாநில, மாவட்ட, மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.