வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
செங்கோட்டையில் பட்டப் பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்துச் சென்ற டிப்-டாப் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் பட்டப் பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்துச் சென்ற டிப்-டாப் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்
செங்கோட்டை ரெயில் நிலையம் உள்ள விஸ்வநாதபுரம் தந்திரியார் தெருவில் வசித்து வருபவர் கனகராஜ் மனைவி தாய் புஷ்பத்தாய் (வயது 73). ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியரான இவர், தனது கணவர் இறந்து விட்டதால் தனது சகோதரி ராணி குடும்பத்தினருடன் சேர்ந்து விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வீட்டில் புஷ்பத்தாய் தனியாக இருந்தார். அப்போது மழைபெய்து கொண்டு இருந்தது.
டிப்- டாப்பாக உடை அணிந்து வந்த 2 மர்மநபர்கள் புஷ்பத்தாயின் வீட்டு கதவைத் தட்டினர். நாங்கள் மழையில் நனைந்து விட்டதாகவும், டவல் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டுள்ளனர்.
சங்கிலி பறிப்பு
உடனே புஷ்பத்தாய் டவல் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது, பின்னால் சென்ற மர்மநபர்கள் இருவரும் புஷ்பத்தாயின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
உடனே, புஷ்பத்தாய் பதற்றத்தில் தனது தங்கையான ராணியிடம் நடந்ததை கூறவே, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.