வீடு புகுந்து பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள் கொள்ளை
வீடு புகுந்து பீரோவில் இருந்த 22 பவுன் நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.;
தா.பேட்டை:
22 பவுன் நகைகள் கொள்ளை
தா.பேட்டை அருகே கண்ணனூர் பாளையம் வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் சத்யா(வயது 29). இவரது கணவர் சரவணகுமார், அதே பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் சத்யா தோட்டத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் அவரது உறவினரான 70 வயது மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் குறி சொல்வதுபோல் வந்த மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு பீரோவை பூட்டிவிட்டு சாவியுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். மதியம் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்த சத்யா துணிகள் சிதறி கிடப்பதை பார்த்து பீரோ சாவியை தேடி உள்ளார். ஆனால் சாவி கிடைக்கவில்லை. இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணை
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பீரோவை உடைத்து திறந்து பார்த்த சத்யா, அதில் இருந்த 22 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் பீரோவில் சேலைக்குள் மறைத்து வைத்திருந்ததால் ரூ.2 லட்சம் மர்மநபரிடம் சிக்காமல் தப்பியது தெரியவந்தது. இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் அளித்தார்.
அதன்பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஷ்மின், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துசென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.