பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்:ஹெலிகாப்டர் விபத்து நடக்கவில்லைகலெக்டர் ஷ்ரவன்குமார் விளக்கம்

ஹெலிகாப்டர் விபத்து நடக்கவில்லை பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-08-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், வாணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து அப்பகுதியில் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து வெடித்து விபத்து ஏற்பட்டதாக 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் சிலர் ஊட்டியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்ததாக பொய்யான தகவலை பரப்பினர். இது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விமானங்கள் சென்ற சத்தம் கேட்டதை உணர்ந்த அப்பகுதி மக்கள் பதட்டம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், வாணாபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் அதிக சத்தம் கேட்டதாக தகவல் வந்தது. இது குறித்து இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ள சூலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் விசாரித்த போது, இது வழக்கமான விமானப்படை பயிற்சி நடைமுறை எனவும், மேற்கண்ட பயிற்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது சம்பந்தமாக வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்