திறப்பு விழா காணாமலேயே சேதமடைந்த சுகாதார வளாகம்
கடுவனூரில் திறப்பு விழா காணாமலேயே சுகாதார வளாகம் சேதமடைந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.;
மூங்கில்துறைப்பட்டு,
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கடுவனூர் கிராமம். இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களான இவர்களின் பெரும்பாலான விடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் இங்குள்ள மக்கள் இயற்கை உபாதைகளை பொதுவெளியில் கழித்து வருகின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் கடுவனூரில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டிட பணி முழுமையாக முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சுகாதார வளாகத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
மேற்கூரை சேதம்
இதனிடையே முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தின் மேற்கூரை சேதமடைந்துவிட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் மக்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா காண்பதற்கு முன்பே சேதமடைந்து தற்போது யாருக்கும் பயனின்றி காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். சுகாதார வளாகத்தை உரிய நேரத்தில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பராமரித்து இருந்தால், மேற்கூரை சேதமடைந்து இருக்காது. தற்போது சுகாதார வளாகம் சேதமடைந்ததன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
நடவடிக்கை
இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சுகாதார வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அதனை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.