வாழைத்தார்களை வெட்டி கடத்த முயன்ற காவலாளி கைது
தோட்டத்துக்குள் புகுந்து வாழைத்தார்களை வெட்டி கடத்த முயன்ற காவலாளி கைது செய்யப்பட்டார்.;
கம்பம் காளவாசல் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). விவசாயி. இவருக்கு கூடலூர்-காஞ்சிமரத்துறை சாலையில், காக்கான்ஓடை பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கூடலூர் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த கவாஸ்கர் (32) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கவாஸ்கர், கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த முத்து என்பவருடன் சேர்ந்து ரமேசின் தோட்டத்தில் இருந்த 60 வாழைத்தார்களை வெட்டி கடத்த முயன்றனர். அப்போது அங்கு ரமேஷ் வந்தார். இதனை பார்த்து பதறிப்போன 2 பேரும் தப்பிஓட முயன்றனர். கவாஸ்கரை ரமேஷ் பிடித்துக்கொண்டார். முத்து தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவாஸ்கரை கைது செய்தனர். தப்பி ஓடிய முத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.