கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்

கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2023-06-20 22:45 GMT

பொள்ளாச்சி

கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கள் இறக்கினால் நடவடிக்கை

பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர் பகுதிகளில் கள் இறக்குவதற்க தோட்டங்களில் பானை கட்டி வைக்கப்பட்டு உள்ளதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், கள் இறக்க தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே சட்டத்திற்கு புறம்பாக கள் இறக்கி விற்பனை செய்ய கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

கள் இறக்க அரசு அனுமதி

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் சட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு இதுவரை அனுமதி வழங்வில்லை. கடந்த காலங்களில் ரூ.20-க்கு விற்பனை ஆன தேங்காய் தற்போது ரூ.7-க்கு விற்பனை ஆகிறது. இது தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கள், நீரா பானம் இறக்க வேண்டும். நீரா பானம் இறக்கினால் பதப்படுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இதற்கு போதுமான வசதி இல்லாததால் அரசு உதவி செய்ய வேண்டும். கள் பாரம்பரியமான உணவுப் பொருள் என்பதால் மருந்தாக தான் பயன்படுத்து வந்தோம். கள் இறக்கி விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு நல்லவருவாய் கிடைக்கும். எனவே தமிழக அரசு கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்