சாலை தடுப்புச்சுவரில் மோதிய அரசு பஸ்
கோவில்பட்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதிய அரசு பஸ்சில் பயணம் செய்த இருபது பேர் காயமடைந்தனர்.;
கோவில்பட்டி:
செங்கோட்டையில் இருந்து கோவில்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் கோவில்பட்டி நகருக்குள் தீயணைப்பு நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்துள்ளது. இதில் பஸ் நிலைதடுமாறி, சாலையில் தாறுமாறாக ஓடி, நடுவே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் நவநீதன், நடத்துனர் முத்து மாரியப்பன் மற்றும் 20 பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை அவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.