நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு -முதல்-அமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று விருதுநகரில் நேற்று நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update: 2022-09-15 23:39 GMT

விருதுநகர்,

விருதுநகரில் நேற்று தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. இதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவில் சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருதும், புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், விருதுநகர் மாவட்டம் குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டியதுடன், கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பணமுடிப்புகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

5 விருதுகள்

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தோன்றியநாள் ஆகிய 3 நினைவுகள்தான் முப்பெரும் விழா.

திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதிதான் திருநாள். நம்மை நாமே புதுப்பித்துகொள்ளும் நாள். உணர்ச்சியும், எழுச்சியும் தரக்கூடிய நாள். அந்த நாளில் தொண்டர்களை வரவழைத்து விழாக்கள் காணுவதை வழக்கமாக வைத்திருந்தார், தலைவர் கருணாநிதி.

அவருடைய வழியில் நாம் விருதுநகர் மண்ணில் விழாக்கோலம் பூண்டு இருக்கிறோம். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் அன்பழகன் ஆகிய 5 பேர் தி.மு.க.வின் முகவரியாகவும், முகமாகவும் விளங்குபவர்கள். இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தத்துவத்தின் அடையாளம். இவர்களின் கொள்கை நம்மை வழிநடத்தி வருகிறது. தகுதி வாய்ந்த அந்த 5 பேரின் பெயரில் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

அரசியல் களத்தை ஈர்த்தது

கருணாநிதி ஒரே ஒரு கடிதம் எழுதி லட்சக்கணக்கானவர்களை மாநாட்டுக்கு வரவழைத்து விடுவார். ஒரு சில கடிதங்களை எழுதி ஜனநாயக ஆட்சியை அமைத்து விடுவார். ஒருசில கடிதங்களை எழுதி சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி விடுவார்.

இதே போல் தலைவர் கருணாநிதி எழுதிய கடிதங்கள் 54 தொகுதிகளாக 4041 பக்கங்களாக வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் நான் எழுதிய திராவிட மாடல் நூலும் வெளியிடப்பட்டது. பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றிருக்கிறார். தி.மு.க. ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல. ஒரு இனத்தின் ஆட்சி என்று நான் கூறினேன் இந்த ஆட்சியை திராவிட மாடல் என்று அன்று நான் பெயர் சூட்டிய போது பலரும் வியந்தார்கள். அண்ணா ஆட்சி, கருணாநிதி ஆட்சி என்பது போல் நான் ஸ்டாலின் ஆட்சி என்று கூறவில்லை. திராவிடம் என்று நான் கூறியபோது நாடு முழுவதும் அரசியல் களத்தை ஈர்த்தது.

ஆரிய மாடல் எது?

திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பேசுவதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.

எல்லோருக்கும் வேலை கொடு, எல்லோருக்கும் அதிகாரத்தை கொடு, ஆணும், பெண்ணும் சமம் என்பதுதான் திராவிட மாடல். சமூகநீதி, சமத்துவம், சமஉரிமை, சகோதரத்துவம் என்பதுதான் திராவிட மாடல். அனைத்து துறை வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதுதான் இந்த ஆட்சிக்கு நான் விதித்த எல்லை.

இதுகுறித்து நான் பல விழாக்களில், கூட்டங்களில் பேசிய உரைகளில் ஒரு பகுதியை தொகுப்பாக வெளியிட்டுள்ளோம். இந்த புத்தகம் சிறிய டைரி வடிவில் வெளியிடப்பட்டு உள்ளது.

எனக்கு இருக்கும் ஆசை எல்லாம் தமிழகம் அனைத்து வகையிலும் முதலிடம் பெற வேண்டும் என்பது தான். அதனை செயல்படுத்தக்கூடிய வலிமையை அண்ணாவும், கருணாநிதியும் நமக்கு தந்துள்ளனர்.

தொண்டர்களை நம்பி

அந்த கடமை என்னுடைய தோளில் சுமத்தப்பட்டுள்ளது. நான் தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன். கட்சி, ஆட்சி இரண்டையும் ஒரு சேர காத்து வருகிறேன். தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. உங்களில் தலைமை தொண்டனாக இருந்து நான் நிர்வகித்து வருகிறேன். கட்சி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது. நான் கருணாநிதியின் லட்சோப, லட்ச தொண்டர்களை நம்பிதான் கட்சியையும், ஆட்சியையும் நிர்வகித்து வருகிறேன்.

1967-ல் ஆட்சிக்கு வந்த போது அண்ணா நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் கட்சியை விட்டு விடக்கூடாது என குறிப்பிட்டதாக கருணாநிதி கூறி உள்ளார். அதை தான் நான் கட்சி நிர்வாகிகளிடமும், அமைச்சர்களையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தெரிவிக்க விரும்புகிறேன்.

நிதி உரிமை பறிப்பு

மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும். கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஒரு ராணுவ வீரருக்கு வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும் என்ற 2 கடமைகள் உள்ளது. அதுபோல மாநிலத்தில் திராவிட மாடல் ஆட்சி, நாடு முழுவதும் கூட்டாட்சி.

நாம் வலிமையான மாநிலமாக இருந்தால் மட்டும் போதாது. இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களும் நம்மை கவனிக்க வேண்டும். நாம் வலிமையாக இருப்பதால் தான் மக்களுக்கு இந்தளவுக்கு நன்மைகளை செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால் இந்த அளவுக்கு நன்மைகளை செய்ய முடியாது. ஜி.எஸ்.டி, மூலம் மாநில நிதி உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. நீட் கல்வி கொள்கையால் நம் உரிமை மறுக்கப்படுகிறது.

40 தொகுதிகளிலும் வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் நம் கூட்டணி கட்சி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் நம் உரிமைகளை காக்கமுடியும். அதற்கு இப்போதே களப்பணி ஆற்ற வேண்டும். கடந்த 2004-ல் கருணாநிதி முழங்கினார். 2019-ல் உங்கள் தொகுதியில் நான் என்று நான் முழக்கமிட்டேன்.

தற்போது இந்த முப்பெரும் விழா மூலம், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெறுவோம் என முழக்கமிடுகிறோம். அதை அடைய நீங்கள்அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்