தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடிக்க கொடுத்ததால் சிறுமி சாவு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடிக்க ெகாடுத்ததால் அந்த சிறுமி உயிரிழந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

Update: 2023-06-16 18:45 GMT


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடிக்க ெகாடுத்ததால் அந்த சிறுமி உயிரிழந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட கோ.கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருடைய மனைவி தீபா (வயது32). இவர்களுக்கு ஆதனா, அகல்யா (8) ஆகிய 2 மகள்கள். ஆதிஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளது.

இதில் சிறுமி அகல்யாவுக்கு கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக புதுச்சேரி, சென்ைன, தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 30-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.

கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அகல்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது தாகம் என கூறியதால் சிறுமியின் தாயார் தீபா, படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் இருந்து ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

சிறுமி அதனை குடித்தபோது அருகில் இருந்த செவிலியர் அது தண்ணீர் அல்ல, நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் (ஒரு வகை அமிலம்) என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை வார்டுக்கு சிறுமி அகல்யாவை மாற்றம் செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து ஆஸ்பத்திரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "டயாலிசிஸ் அறையில் செவிலியர்கள் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்ததன் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் எங்கள் மகளை இழந்துவிட்டோம்" என்றனர்.

சம்பவம் பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.

டாக்டர்கள் விளக்கம்

சிறுமியின் உயிரிழப்பு குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-

சிறுமிக்கு நிரந்தர சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருந்தது. இதனால், பல இடங்களில் சிகிச்சை பெற்றிருக்கிறார். மதுரையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும், வாரம் இருமுறை ஹீமோ டயாலிசிஸ் செய்யப்பட்டது. முதற்கட்டமாக சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில், மூளையில் ரத்தக்கசிவு காரணமாகவும் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. இருப்பினும் அனைத்து உறுப்புகளும் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன. அதன் அறிக்கை வந்த பின்னர் முழுமையாக தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்