சாப்பாடு இல்லை என்றதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்

சாப்பாடு இல்லை என்று கூறியதால் ஓட்டலை 5 பேர் கும்பல் சூறையாடிய சம்பவம் குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

Update: 2023-02-02 18:45 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அண்ணா சிலை அருகில் ஓட்டல் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் ஓட்டலை அடைப்பதற்கு தயாராகி கொண்டிருந்தனர். அப்போது சிலர் அந்த ஓட்டலுக்கு வந்து சாப்பாடு கேட்டனர். அதற்கு ஊழியர்கள், சாப்பாடு இல்லை, முடிந்து விட்டது என்று கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் அவர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் ஊழியர்களையும் தாக்கினர். இதில் ஊழியர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 53), மதுரை முதுகுளத்தூரை சேர்ந்த சரவணன் (42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றாலம் அருகே உள்ள காசி மேஜர்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மகேந்திரன் (வயது 23), செல்லதுரை மகன் மாரிமுத்து (20), முருகன் மகன் பட்டு (26), இசக்கிமுத்து மகன் கார்த்திக் (20), குட்டி ராஜ் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே, ஓட்டல் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்