செல்போன் கேட்டு மிரட்டி தொழிலாளியை கத்தியால் வெட்டிய கும்பல்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளியிடம் செல்போன் கேட்டு மிரட்டி தலையில் கத்தியால் வெட்டிய கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Update: 2023-08-10 07:45 GMT

கும்மிடிப்பூண்டி,

சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி பாதல் நாயக் (வயது 21). இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்காக நேற்று முன்தினம் சொந்த ஊரில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு வந்தார்.

அன்று இரவு சிப்காட் அடுத்த பாத்தபாளையம் கிராமத்தில் நண்பருடன் அறையில் தங்கி இருந்த பாதல் நாயக், தான் வேலைக்கு வந்து விட்டதை தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தவாறு அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பாதல் நாயக்கிடம் செல்போனை கேட்டனர். அவர் செல்போனை கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் அவரது தலையில் வெட்டினர். வலியால் அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இதையடுத்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பாதல் நாயக்கை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில் மொத்தம் 18 தையல்கள் போடப்பட்டு உள்ளது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இதுபோன்று தொடர்ந்து தொழிலாளர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்தினர் சார்பில் போலீசாரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகே கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்த போலீசார், அதன் அடிப்படையில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்