டி.கல்லுப்பட்டி அருகே கோவிலில் இருந்து உண்டியலை தூக்கிச்சென்று உடைத்து பணம் திருட்டு- ஊருணி அருகே வீசிய கும்பல்
கோவில் உண்டியலை தூக்கிச்சென்று, பணத்தை திருடிவிட்டு ஊருணி அருகே போட்டுவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.;
பேரையூர்
கோவில் உண்டியலை தூக்கிச்சென்று, பணத்தை திருடிவிட்டு ஊருணி அருகே போட்டுவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
உண்டியலை தூக்கி சென்றனர்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வில்லூரில் அன்னை பராசக்தி காளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாலசுப்பிரமணி (வயது 46) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவில் பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் கோவிலை திறக்கச் வந்தபோது, கோவில் முன்புறம் வெளியே இருந்த 4 அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலை காணவில்லை. மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்றது தெரியவந்தது. பூசாரியும், கோவில் நிர்வாகிகளும் அப்பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர்.
பணம் திருட்டு
இந்த நிலையில் வில்லூர் அருகே உள்ள புளியம்பட்டி ஊருணி அருகே உண்டியல் கிடந்தது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிவிட்டு, அப்பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து பூசாரி பாலசுப்பிரமணி, வில்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். உண்டியலில் காணிக்கை பணம் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.