மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள ஜி-20 மாநாடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஜி-20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இதன் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அமைப்பின் வெவ்வேறு கருத்தியல் மாநாடுகள் இந்தியாவில் உள்ள முக்கிய பாரம்பரிய பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் மாநாடு கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளில் நடந்தது. புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் அறிவியல் மாநாடு நடந்தது. புதுடெல்லியில் உச்சிமாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் மாமல்லபுரம், ரேடிசன் ரிசார்ட்டில் நாளை (வியாழக்கிழமை) நாளை மறுதினம் ( வெள்ளிக்கிழமை) அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகளின் டபிள்யூ - 20 மாநாடு நடக்கிறது. 17-ந் தேதி (சனிக்கிழமை) காலை பெண் பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிடுகின்றனர் அதே நட்சத்திர விடுதியில் 19 மற்றும் 20-ந்தேதிகளில் தேதிகளில் மற்றொரு மாநாடு நடக்கிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் மாநாடு நாட்களில் விடுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் சூப்பிரண்டு ருக்மாங்கதன் மற்றும் பிற பாதுகாப்பு அலுவலர்களுடன், மாமல்லபுரத்தில் ஜி20 மாநாடு நடக்க உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாநாடு பிரதிநிதிகளை வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) விடுதியில் இருந்து சிற்ப பகுதிகளுக்கு பாதுகாப்புடன் பஸ்களில் அழைத்து செல்ல சரியான வழித்தடம் குறித்து போலீசாருடன் கடற்கரை கோவில் ஐந்துரதம் உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
தொல்லியல் துறையினருடன் ஆலோசித்து சுற்றுலா வரும் பெண் பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடுகள், சுற்றுலா வழிகாட்டிகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்தனர்.