சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீர் முன்னாள் சபாநாயகரின் மகன் கார் சிக்கியது
திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் முன்னாள் சபாநாயகரின் மகன் கார் சிக்கியது.;
திருப்பரங்குன்றம்
பலத்த மழை
மதுரை திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் நீண்டநேரம் பலத்த மழை கொட்டியது.
இதனால் திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி தந்தது..
சுரங்கப்பாதையில் கார் சிக்கியது
தி.மு.க. ஆட்சியில் சபாநாயகராக பொறுப்பு வகித்தவர் தமிழ்க்குடிமகன். இவருடைய மகன் பாரி. இவர், மதுரை புதூரில் இருந்து தனது மகளை கல்லூரிக்கு சென்று பார்ப்பதற்காக ஒரு காரில் புறப்பட்டு வந்தார்.
அந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் வந்தபோது, அங்கு தேங்கி இருந்த மழைநீரில் அவரது கார் சிக்கியது. காரின் பாதி உயரம் வரை தண்ணீர் இருந்ததால் கார் சுரங்கப்பாதையிலேேய நின்று கொண்டது. உடனடியாக இதுகுறித்து திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரை மீட்டு, சுரங்கப்பாதையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
கண்மாயையொட்டி இந்த சுரங்கப்பாதை அமைந்து இருப்பதால் எப்போதும் அதன் உள்ளே நீர்க்கசிவு உள்ளது. சற்று நேரம் மழை பெய்தாலும் அங்கு தண்ணீர் தேங்கிவிடும். ஏற்கனவே இந்த சுரங்கப்பாதையில் மாணவ, மாணவிகளுடன் அரசு பஸ் சிக்கியது. மாநகராட்சியின் குப்பை லாரியும் சிக்கி நின்றது குறிப்பிடத்தக்கது.