புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம்
பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம் அமைத்துள்ளனர். அதன்படி குடியிருப்பு முன்பு ஆட்ைட கட்டி வைத்துவிட்டு மயக்க ஊசி துப்பாக்கியுடன் காத்திருந்தனர்.;
குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம் அமைத்துள்ளனர். அதன்படி குடியிருப்பு முன்பு ஆட்ைட கட்டி வைத்துவிட்டு மயக்க ஊசி துப்பாக்கியுடன் காத்திருந்தனர்.
அட்டகாசம் செய்யும் புலி
பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியின குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3-ந் தேதி முதல் புலி புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அது குடியிருப்புவாசிகளுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை அடித்து கொன்று வருகிறது.
இந்த புலியைப் பிடிக்க மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா தலைமையில் வனத்துறையினர், சிறப்பு பயிற்சி பெற்ற எலைட் படையினர், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வனகால்நடை டாக்டர்கள் என 3 குழுவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க மொத்தம் 45 கண்காணிப்புக் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கூண்டுகளும் வகைப்பட்டுள்ளன. ஆனால் புலி இதுவரை சிக்கவில்லை.
புதிய வியூகம்
இந்தநிலையில் நேற்று இங்குள்ள ரப்பர் கழக அதிகாரிகளின் குடியிருப்பு பகுதி வழியாக புலி கடந்து சென்றதாக தகவல் பரவியது. இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் புதிய வியூகம் அமைத்துள்ளனர். அதன்படி நேற்று இரவு இங்கு காலியாக உள்ள ஒரு ரப்பர் கழக அலுவலர் குடியிருப்பு முன்பு ஒரு ஆட்டைக் கட்டி வைத்து விட்டு, வீட்டுக்குள் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் காத்திருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:-
புலியை பிடிக்கும் வகையில் வனத்துறை அடுத்தக்கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போது களியல் வனச்சரகம் தவிர இதர வனச்சரகங்களில் இருந்து கூடுதல் வனத்துறை ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
கால்தடம் கிடைத்தது
கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் புலியின் கால் தடங்கள் தெளிவாகக் கிடைத்துள்ளது. இந்தக் கால் தடங்களை ஆய்வு செய்யும் வகையிலும், புலி எங்கெங்கு நடமாடுகிறது என்பது குறித்து கூடுதல் தகவல்களை திரட்டி தரும் வகையிலும் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து வன உயிரியலாளர் நாளை (அதாவது இன்று) இங்கு வரவுள்ளார். தற்போது கிடைத்துள்ள தரவுகளின் படி அது வயதான புலி என்பதை உறுதி செய்துள்ளோம். இந்தப் புலி காட்டுக்குள் ஓடும் இதர விலங்குகளை வேட்டையாடும் திறன் இல்லாமல் உள்ளது. பிற விலங்குகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது என்பதையும் கணித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.