மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்
விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது;
விழுப்புரம்
நான்கு வழிச்சாலை
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நகர எல்லையான ஜானகிபுரம் சந்திப்பில் இருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ. நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் ஜானகிபுரத்தில் புறவழிச்சாலை தொடங்கும் இடத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ட்ரம்பெட் வடிவிலான மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி வாகனங்கள் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு ஜானகிபுரம் சந்திப்பு பகுதியில் வட்ட வடிவிலான மேம்பாலம் அமைக்க முதலில் முடிவு செய்யப்பட்டது.
மேம்பால பணிகள்
ஆனால் ஜானகிபுரம் சந்திப்பில் கூடுதல் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மேம்பால திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி திருச்சியில் இருந்து விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக சென்னை செல்வதற்கும், விழுப்புரம் நகர பகுதிக்குள் செல்வதற்கும் தனித்தனியாக 2 மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜானகிபுரம் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக இலகுரக வாகனங்கள் செல்ல மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பாதையும் அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்காக ரூ.15.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது.
4 மாதத்திற்குள் முடியும்
இதுகுறித்து நகாய் அதிகாரிகளிடம் கேட்டபோது, விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பீம் போடப்பட்டு ஸ்லாப்கள் அமைக்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டப்படி இப்பணிகள் இன்னும் 4 மாத காலத்திற்குள் முடிக்கப்படும். அதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு மேம்பாலம் அமைந்ததும் போக்குவரத்து நெரிசல் குறையும், அதுபோல் சாலை விபத்துகளும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.