தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு வரத்தயாரா? - கவர்னருக்கு அமைச்சர் துரைமுருகன் சவால்
தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு வரத்தயாரா? என்று கவர்னருக்கு அமைச்சர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.;
நெல்லை மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டவுன் குளப்பிறை தெருவில் நேற்று நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன்கான், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி வரவேற்றார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் பேசினர். அப்போது அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தி.மு.க. ஆட்சியில்தான் நெல்லை மாவட்டத்தில் அதிக அணைகளை கட்டி உள்ளோம். கடனாநதி அணையை விரிவாக்கம் செய்தது தி.மு.க. அரசுதான்.
நமது அரசுக்கு எதிரிகள் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு விதமாக முளைக்கிறார்கள். தற்போது நமக்கு எதிரிகளே இல்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் போல் கவர்னர் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி, சிவனே என்று இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடமே தெரியவில்லை. எதிர்க்கவே ஆட்கள் இல்லாத ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் நடந்துள்ளது. அதனால் இதுவரை எந்த எதிர்க்கட்சியும் தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டவில்லை. எங்கள் ஆட்சியை குறை சொல்லும் ஒரே நபராக கவர்னர் ஆர்.என்.ரவி மட்டுமே உள்ளார். அவரிடம் தமிழக அரசு நிறைவேற்ற கொடுத்த 15 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. ஆனால் கவர்னர் மாளிகையில் எந்த மசோதாவும் இல்லை என்று அவர் கூறிஉள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கவர்னர் சொல்கிறார். ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது என்று சொல்கிறார். நாங்கள் நீதிபதி சொன்னதை ஏற்க வேண்டுமா? கவர்னர் சொல்வதை கேட்க வேண்டுமா? என தெரியவில்லை. பெட்டிக்கடைக்கு கூட லாய்க்கு இல்லாதவர் கவர்னர்.
தேவைப்பட்டால் அவர் கவர்னர் பதவியை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு வரத்தயாரா? தேர்தலில் நின்று சபைக்கு வாருங்கள், எதிர்க்கட்சியாக பேசுங்கள் அல்லது பா.ஜனதாவில் சேர்ந்து மத்திய மந்திரியாக செயல்படுங்கள்.
தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். தமிழக மக்களின் உரிமைக்காக போராடும். 100 ஆண்டுகளை கடந்தும் இந்த அரசு நீடிக்க வேண்டும். தி.மு.க.வில் இளைஞர் சமுதாயம் அதிகமாக உள்ளது. நெல்லை சீமை தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் செய்திருந்தார்.