கோவையில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் கழுகுகள் மோதியதால் பரபரப்பு
கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் கழுகுகள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. இதில் சர்வதேச அளவில் காலை ஏர் அரேபியா, மாலை சிங்கப்பூர் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு 164 பயணிகளுடன் காலை 7 மணிக்கு புறப்பட்டது.
அப்போது விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு கழுகுகள் விமானத்தின் இடது பக்க எஞ்சின் மீது மோதியது. இதில் இரண்டு கழுகுகளில் ஒன்று என்ஜின் பிளேடில் அடிபட்டு இறந்தது. இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது.
மேலும் விமானத்தின் சேதங்கள் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 4 மணி நேரமாக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.