இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் மீன்பிடி தொழில்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் மீன்பிடி தொழில் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.;
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் மீன்பிடி தொழில் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தங்கள் படகுகளையும், உடைமைகளையும் பத்திரமாக கரையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் மீன்வளத்துறையினர் மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.மேலும் கரையையொட்டி மீன் பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடித்தல் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தல் ஆகிய எந்தவிதமான மீன்பிடி தொழிலும் செய்ய வேண்டாம் என்றும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை தாழம்பேட்டை, புதுப்பேட்டை சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடி தொழில் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 10-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஒரு மாத காலமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.
கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பழையாறு மீனவர்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதைத்தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாகவே மீனவர்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறோம். மீன் வரத்தும் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே மீனவ குடும்பங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.