மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை இந்த தடை அமலில் இருக்கும்.;
32 மீனவ கிராமங்கள்
இந்த காலக்கட்டத்தில் 240 குதிரை திறன் கொண்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, மீமிசல் உள்பட 32 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 42 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியாகும். இங்கு 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன.
இதில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ராமேசுவரத்தை தாண்டி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் வஞ்சிரம், நகரை நெத்திலி, சீலா, ரால், கணவாய் உள்ளிட்ட மீன்வகைகள் அதிகமாக சிக்கும். ஜெகாதப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளன.
மீன்பிடிக்க தடை
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 590 மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தற்போது தடை உள்ளது. மீதம் உள்ள சில கிராமங்கள் மேற்கு கடற்கரையில் வருவதால் அவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் கிடையாது. தமிழகத்தில் உள்ள மீன்பிடி தடைக்காலம் மீனவர்களுக்கும், மீன்களுக்கும் பொருத்தமாக இல்லை என்பதால் அரபிக்கடல் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் இருப்பது போன்று அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் அமைப்புகள் மற்றும் அசைவ பிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-
தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்
அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி:- ஆரம்ப காலகட்டத்தில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு மீன்வளம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தை பெரும்பாலான மீனவர்கள் முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் குறிப்பிட்ட இந்த மீன்பிடி தடைக்காலம் மீனவர்களுக்கு பொருத்தமற்ற முறையில் உள்ளது. தமிழகத்தில் மீனவர்கள் இந்த மீன் பிடி தடைக்காலத்தை மேற்கு கடற்கரை மாநிலங்களான கேரளா, கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பொருத்தமாக வைத்து உள்ளனர். அதேபோன்று, தமிழகத்திலும் மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு கோடை மழை பெய்யும். அத்துடன் காற்றும் அதிகமாக வீசுவதால் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக சரியான காலக்கட்டதில் அவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் வருகிறது. மழைக்காலத்தில் மீன்பிடி தடைக்காலம் அங்கு அமலில் இருப்பதால் அங்கு மீன்கள் இனப்பெருக்கம் அதிகளவில் நடக்கிறது. ஆனால் இங்கு கடுமையான வெயில் இருக்கக்கூடிய இந்த நேரத்தில் மீன்கள் இனவிருத்தி செய்கிறதா? செய்யவில்லையா? என தெரியாமல் இந்த மீன்பிடித் தடைகாலத்தை அமல்படுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று நல்ல மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழக மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்காலத்தை பொருத்தமான மாதங்களில் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
அறிவியல்பூர்வ ஆய்வு
தமிழக மீன்வளத்துறை இணை இயக்குனர் (ஓய்வு) தில்லைகோவிந்தன்:- கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். பொதுவாக மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் உணவைத் தேடி எப்போதும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருப்பது வாடிக்கைதான். இனப்பெருக்கத்திற்காகவும், மீன் உற்பத்தி அதிகரிப்பதற்காகவும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலத்துக்கான மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் காலநிலை மாற்றத்தால் தற்போது கடல்களில் மீன்கள் கிடைப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அரபிக்கடல் பகுதியில் கிடைக்கும் சாளை மீன்கள் தற்போது அதிகளவில் வங்காள விரிகுடா கடல் பகுதிகளிலும் கிடைக்கிறது. எனவே மீண்டும் அகில இந்திய அளவில் ஒரு பெரிய அளவில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். மாறாக அனுபவ பூர்வமாக எந்த முடிவும் எடுப்பது சரியாக இருக்காது.
பருவநிலையில் மாற்றம்
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் பகுதியை சேர்ந்த வடிவேல்:- உலகின் அனைத்து பகுதிகளிலும் தற்போது வெப்பநிலை மற்றும் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானிகளும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்துகின்றனர். எனவே பருவகால மாற்றத்திற்கு ஏற்ப கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் நிச்சயமாக மாறுபட்டு இருக்கும். அரசாங்கம் கடல் வளத்தை பாதுகாப்பதற்காகவே மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடி தடையை அமல்படுத்துகின்றனர். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பருவகால மாறுபாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும் மாதத்திலேயே தொடர்ந்து அறிவிப்பது நிச்சயமாக பயன் தராது. கடல் ஆராய்ச்சியாளர்கள் மீன்களின் இனப்பெருக்க காலத்தை சரியாக கண்டறிந்து அதில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
மீன்வளத்தை பாதுகாக்க...
கோவிந்தப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த சத்யராஜ்:- கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் மீன் கிடைக்காமல் சிரமம் அடைகின்றனர். இதனால் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் விலை அதிகமாகி விடுகின்றன.
தற்போது பருவநிலை மாற்றத்தால் ஜூன், ஜூலை மாதங்களில் மழை, புயல் எதுவும் சமீப காலமாக ஏற்படுவதில்லை. மாறாக மீன் பிடி தடைக்காலம் முடிந்து ஆகஸ்டு மாதம் தொழிலுக்கு கடலுக்கு செல்லும் போது தான் புயல், கடல் கொந்தளிப்பு, உயிர் சேதம் போன்றவை ஏற்படுகிறது. எனவே மீனவர்கள் நலன் கருதி அரபிக்கடல் பகுதிக்கும் மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.