கலெக்டர் அலுவலகத்தில் துண்டை விரித்து படுத்த மீனவரால் பரபரப்பு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் துண்டை விரித்து படுத்த மீனவரால் பரபரப்பு;

Update: 2023-04-12 18:45 GMT


வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்தவர் காமராஜ். மீனவரான இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் துண்டை விரித்து படுத்தார். அதைப்பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் காமராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காமராஜ், எனது தந்தை அவரது பெயரில் உள்ள இடத்தை எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இந்த இடத்தை பஞ்சாயத்தார் தானமாக கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, தொழில் மறியல் செய்தனர். இதனால் எனது இடத்தை பயன்படுத்த முடியாத நிலையும், தொழில் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் குடும்பம் நடத்தக்கூட வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகிறேன்.

இது குறித்து 5 ஆண்டுகளாக கலெக்டர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நான் உண்ணாவிரதம், தீக்குளிக்கும் முயற்சி என பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே எனது இடத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றார். இது குறித்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததையடுத்து அவரை போலீசார், விசாரணைக்காக நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்