களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை

எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

Update: 2023-01-12 19:00 GMT

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.

பொங்கல் பரிசு

அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, நொச்சியோடைப்பட்டி, கோபால்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மண்பானை விற்பனை மும்முரமாக நடக்கிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

விற்பனை குறைந்தது

கணேஷ்வரி (மண்பானை வியாபாரி, பாறைப்பட்டி) :- கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் பானைகள் முதல் இறுதிச்சடங்குக்கு பயன்படும் கலையம் வரை களிமண்ணால் செய்யப்பட்ட பானைகளையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தினர். ஆனால் தற்போது நாகரிகத்தின் வளர்ச்சி காரணமாக சமையலுக்கு சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் மண் பானைகளின் விற்பனை வெகுவாக குறைந்தது. அதே நேரம் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானை விற்பனை சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. இருந்த போதிலும் வேறு தொழில் தெரியாததால் குறைவான வருமானம் கிடைத்தாலும் பானை தயாரிக்கும் தொழிலையே தற்போது வரை மேற்கொண்டு வருகிறோம்.

இயற்கையுடன் இணைந்து

ஜமுனா (குடும்ப தலைவி, அனுமந்தநகர்) :- உழவர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது தான் நமது பாரம்பரியம் வெளிப்படுகிறது. கிராமங்களில் அதிகாலையில் வீடுகள் முன்பு புத்தம் புதிய மண் பானையில் பொங்கலிடுவதை தற்போதும் பார்க்க முடியும். ஆனால் நகர் பகுதியில் நமது பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்காமல் கியாஸ் அடுப்பில் சில்வர் பாத்திரங்கள் மூலம் பொங்கலை வைத்து பண்டிகை கொண்டாட்டத்தில் பெண்கள் ஈடுபடுகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகையின் போது உரியடி, ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குதல், வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் முன்பு நடைபெறும். ஆனால் தற்போது காலையில் வேக வேகமாக குக்கரில் பொங்கலை வைத்துவிட்டு பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிகளை காண்பதற்காக டி.வி. முன்பு அமர்ந்துவிடுகின்றனர். இது தவறான பழக்கம். பொங்கல் பண்டிகையை இயற்கையுடன் இணைந்து வீட்டு முற்றத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கலிட்டு கொண்டாட வேண்டும்.

பாண்டி பிரியா (கல்லூரி மாணவி, திண்டுக்கல்) :- பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து பாட புத்தகங்களில் நிறைய படித்திருக்கிறேன். புத்தகங்கள் மூலம் தான் நம் முன்னோர்களின் கலாசாரம், பண்பாடு குறித்து தெரிந்துகொண்டேன். ஆனால் நம்முன்னோர்கள் கொண்டாடியது போல் பாரம்பரிய முறைப்படி தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது இல்லை. பொங்கல் பண்டிகை தினத்தன்று காலையில் வேக வேகமாக பொங்கலை வைத்து சூரியனுக்கு படையல் போட்டு வழிபாடு செய்த பின்னர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கலை சாப்பிட கொடுக்கின்றனர். அதோடு பண்டிகை கொண்டாட்டங்களும் நிறைவடைந்து விடுகிறது. பின்னர் நாள் முழுவதும் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்வையிடுவதிலேயே பொதுமக்கள் நேரத்தை செலவிடுகின்றனர். இதுபோன்ற கொண்டாட்டங்கள் நமது கலாசாரம், பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்துவிடும்.

யாழினி (கல்லூரி மாணவி, பழனி) :- சிறு வயதில் எங்கள் தெரு முழுவதும் வீடுகள் முன்பு பொங்கலிட்டு பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது அப்படி அல்ல. வீட்டிலேயே சில்வர் பாத்திரங்கள் அல்லது குக்கரில் பொங்கலிட்டு பண்டிகை கொண்டாடுகின்றனர். அதேபோல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு மட்டுமே தற்போது வரை நடக்கிறது. நாகரிக மோகத்தால் நமது பண்பாட்டை மறந்துவிடக்கூடாது. பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். இளையதலைமுறையினருக்கும் அதன் சிறப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்