அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முத்தரசன் பேட்டி
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.;
ஜெயங்கொண்டம்:
மக்களுக்கு எதிரான திட்டங்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது;-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படவில்லை. அக்கட்சியை மாற்று கட்சி தலைவர் யாரோ மறைமுகமாக இயக்குகிறார்கள். அவர்கள் யார் என்பதை கேட்பவர்களிடம் கேட்டால் நன்றாக தெரியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் தேவையற்றது. இந்த திட்டத்தில் பல சதிகள் இருப்பதாகவும், மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆள் சேர்க்கும் திட்டம் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நல்ல திட்டங்கள் என்றால் அதனை எதிர்க்கட்சிகள் வரவேற்கும். மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம்
கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுகிறது. மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதாகவும் கூறினார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தமிழக கவர்னர் ரவி, கவர்னராக செயல்பட வேண்டும். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிபோல் பேசுகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ சேர்ந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துவோம். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்க விடுபட்ட கிராமங்களுக்கும் அரசானை வழங்க அரசுக்கு வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.