தாயை பார்த்த மகிழ்ச்சியில் மகளை மறந்த தந்தை
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த தாயை பார்த்த மகிழ்ச்சியில் 5 வயது மகளை தந்தை தவிக்கவிட்டு சென்று விட்டார். விமான நிலைய அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த தாயை பார்த்த மகிழ்ச்சியில் 5 வயது மகளை தந்தை தவிக்கவிட்டு சென்று விட்டார். விமான நிலைய அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
தாயாரை வரவேற்க...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவரது தாயார் கமாமிஷா. இவர் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.
தாயை வரவேற்பதற்காக சையது இப்ராஹிம் காரில் தனது 5 வயது மகள் மற்றும் குடும்பத்துடன் திருச்சி விமான நிலையம் வந்தார். பின்னர் தனது தாய் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, அவரை அழைத்துக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
மகளை காணாமல் அதிர்ச்சி
இந்தநிலையில் சில கிலோ மீட்டர் தூரம் சென்றதும் 5 வயது மகள் காரில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாயை பார்த்த மகிழ்ச்சியில் மகள் காரில் ஏறினாளா? இல்லையா? என்பதை கவனிக்காமல் சையது இப்ராஹிமும், அவரது குடும்பத்தினரும் காரில் புறப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக காரை திருப்பி திருச்சி விமானநிலையம் நோக்கி மீண்டும் வந்தனர். இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதியில் 5 வயது குழந்தை தனியாக நின்று அழுது கொண்டிருப்பதை கவனித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த குழந்தையை மீட்டனர்.
ஒலிபெருக்கியில் அறிவிப்பு
பின்னர் முனைய மேலாளர் அறையில் அமர வைத்து ஒலிபெருக்கி மூலம் குழந்தையை மீட்டு செல்லுமாறு அறிவிப்பு செய்தனர். சுமார் அரை மணி நேரம் குழந்தையை பற்றி அறிவிப்பு செய்தும் யாரும் வரவில்லை.
இதனிடையே சையது இப்ராஹிம் குடும்பத்தினர் மகளை தேடி விமானநிலையம் வந்தனர். விமான நிலையத்தில் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அங்கிருந்த தொழில் பாதுகாப்பு படையினரிடம் விசாரித்தபோது, குழந்தை முனைய மேலாளர் அறையில் இருப்பது தெரியவந்தது.
கண்ணீர் மல்க நன்றி
அதன்பின் அங்கு சென்ற பெற்றோர் குழந்தை நிற்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தையை கட்டித்தழுவி நிம்மதி அடைந்தனர். குழந்தையை பத்திரமாக மீட்டு கொடுத்த விமானநிலைய அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.