குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை அடித்துக் கொலை
புதுக்கோட்டை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்துக் கொன்ற வாலிபரை ேபாலீசார் கைது செய்தனர்.;
கூலித்தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தாள். இவர்களது மகன் சூர்யா (22). இவர் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வெளியூர் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
குமரேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் போது மது குடித்துவிட்டு தனது மனைவி வசந்தாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
தகராறு
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் குமரேசன் மது அருந்திவிட்டு மனைவி வசந்தாளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது குமரேசன் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து வசந்தாளை தாக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கு வந்த சூர்யா, குமரேசனை தடுத்து நிறுத்தி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் குமரேசன், சூர்யாவை தாக்கியுள்ளார்.
சாவு
இதில் ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து குமரேசன் தலையில் பலமாக தாக்கினார். இதையடுத்து பலத்த காயமடைந்த குமரேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குமரேசனை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரிமளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.