காட்டெருமை முட்டி விவசாயி படுகாயம்
கொடைக்கானலில் காட்டெருமை முட்டியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.;
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளன. வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் அடிக்கடி நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 68) என்பவர் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டெருமை ஒன்று மனோகரனை முட்டி தூக்கிவீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே மற்றொரு காட்டெருமை உலா வந்தது. இதை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த காட்டெருமை அருகில் உள்ள தனியார் பங்களாவுக்குள் சென்றது. எனவே காட்டெருமைகள் நகர் பகுதி மற்றும் விவசாய தோட்டங்களுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும். அதேபோல் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.