தேனியில் பரபரப்பு:மாணவர்கள், ஆசிரியர்களை வெளியேற்றி பள்ளிக்கு பூட்டு:முதன்மை கல்வி அதிகாரி விசாரணை

தேனியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.

Update: 2023-04-11 18:45 GMT

பள்ளிக்கு பூட்டு

தேனி சுப்பன்தெரு திட்டச்சாலையில் ராஜவாய்க்கால் கரையோரம் மகாராஜா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியின் நிர்வாகி ஒருவர் நேற்று இந்த பள்ளிக்கு வந்தார்.

தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாள், ஆசிரியை சுமதி மற்றும் சுமார் 20 மாணவ, மாணவிகளை பள்ளியில் இருந்து வெளியேற்றிவிட்டு பள்ளி வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை ஆகியவற்றுக்கு அந்த நபர் பூட்டு போட்டார். பின்னர் நுழைவு வாயிலுக்கும் பூட்டுபோட்டு பூட்டிவிட்டு அவர் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளும், தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆகியோரும் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர்.

விசாரணை

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவுக்கு புகார் சென்றது. அவர் முதன்மை கல்வி அதிகாரியை நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் அங்கு வந்தார். பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியையிடம் அவர் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள் கூறும்போது, 'தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆகியோருக்கான சம்பளத்தை 6 மாதகாலமாக வழங்காமல் அதே நிர்வாகி ஒருவர் நிறுத்தி வைத்தார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சம்பளத்தை பெற்றோம். இந்நிலையில், நிர்வாக பிரச்சினை காரணமாக பள்ளி நிர்வாகி ஒருவர் வந்து எங்களை வெளியேற்றிவிட்டு பூட்டு போட்டுச் சென்று விட்டார்' என்றனர்.

அப்போது முதன்மை கல்வி அதிகாரி 'இந்த பள்ளியை மூட ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதே' என்று ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, நோட்டீஸ் அனுப்பியது தங்களுக்கு தெரியாது என்று ஆசிரியர்கள் கூறினர்.

மாணவர்கள் எதிர்காலம்

பின்னர் மாணவ, மாணவிகளை ஆட்டோக்களில் ஏற்றி வீட்டுக்கு அனுப்புமாறு முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில், மாணவ, மாணவிகள் 2 ஆட்டோக்களில் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய முதன்மை கல்வி அதிகாரியிடம் 'இந்த சம்பவம் குறித்தும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்? பள்ளியை மூட எப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டது?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்