ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் சாவு
அருப்புக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீரென இறந்தார்.;
அருப்புக்கோட்டை,
மதுரை அயிராவதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்ராஜா (வயது 53). இவர் மதுரை சிப்காட் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாட்டுத்தாவணியில் இருந்து திருச்செந்தூர் சென்று விட்டு மீண்டும் அவர் மதுரைக்கு 62 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தார். அவருடன் கண்டக்டர் திருப்பதி பணியில் இருந்தார். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சாய்பாபா கோவில் அருகே தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென முருகேஸ்ராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஸ்சின் வேகத்தை குறைத்து பஸ்சை ஓரமாக நிறுத்த முயன்றார். பஸ் மெதுவாக செல்வதை உணர்ந்த கண்டக்டர் திருப்பதி முன்னால் சென்று பார்த்தார். அப்போது நெஞ்சுவலியால் முருகேஸ்ராஜா துடித்து கொண்டு இருப்பதை அறிந்து பஸ்சை திருப்பதி நிறுத்தினார். அப்போது முருகேஸ்ராஜா சாய்ந்து விழுந்தார். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 மருத்துவ பணியாளர்கள் விரைந்து வந்து டிரைவர் முருகேஸ்ராஜாவை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி விடப்பட்டனர்.