ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

வள்ளியூர் அருகே முதுமையில் கவனிக்க ஆள் இல்லாததால் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்தார்.

Update: 2023-08-04 18:45 GMT

நாகர்கோவில்:

வள்ளியூர் அருகே முதுமையில் கவனிக்க ஆள் இல்லாததால் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்தார்.

தண்டவாளத்தில் ஆண் பிணம்

நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கும், நாங்குநேரிக்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலை

அப்போது இறந்தவர் நெல்லை மாவட்டம் ஆனைகுளம் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 65) டிரைவர் என்பதும், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்களுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள்.

முருகேசன் மும்பையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். ஊரில் அவருக்கு சொந்த வீடு இருக்கிறது. ஆனால் மனைவி இல்லாததால் அவர் தனிமையில் இருந்துள்ளார். இதனால் மகள்களின் வீடுகளுக்கு சென்று தங்கி வந்தார். சில நாட்கள் மூத்த மகள் வீட்டிலும், சில நாட்கள் இளையமகள் வீட்டிலும் என்று நாட்களை கடத்தி வந்தார்.

மன உளைச்சல்

எனினும் முதுமை காலத்தில் முருகேசனை உடனிருந்து கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அத்துடன் அவருடைய உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்