தமிழகத்தை காப்பாற்றும் பொறுப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு

தமிழகத்தை காப்பாற்றும் பொறுப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு என்று வேலூரில் நடந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2023-03-12 17:56 GMT

பிறந்தநாள் விழா

வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் ஆகியவை வேலூர் கோட்டை வெளிமைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 7,070 பெண்களுக்கு சேலைகள், தி.மு.க.வை சேர்ந்த 70 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 770 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, 32 பேருக்கு தையல் எந்திரம் மற்றும் சலவை பெட்டிகளை வழங்கி பேசியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி

தமிழ்நாட்டில் வேலூருக்கு ஈடான ஊர் எங்கும் இல்லை. சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே முத்தாய்ப்பாய் அமைந்த ஊர். அதனால் அனைவருக்கும் பெருமை. தமிழகத்தில் தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகும் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்-அமைச்சராக இருந்துள்ளனர். அவர்கள் யாராவது திராவிடம் என்று உச்சரித்து இருக்கிறார்களா?.

ஒரு நாளும் உச்சரித்ததில்லை. அவர்கள் திராவிடத்திற்கு சம்மந்தமில்லாதவர்கள் போல இருந்தனர். அதனால் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபோது திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் எண்ணங்கள், கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றின் ஆட்சி தான் தற்போது திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் புனரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்கள் மட்டும் ஒத்துழைப்பு அளித்தால், அந்த கட்டிடமும் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடமாக அமையும்.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் குளறுபடி

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவை தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தான். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நடந்த குளறுபடி, முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 80 சதவீத திட்டங்களை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.

தமிழகத்தை காப்பாற்றும் பொறுப்பு

தமிழகத்தை காப்பாற்றக்கூடிய பொறுப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு. அதனால் இளைஞர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ் அணி திரள வேண்டும். வரும் நிதிநிலை அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக முதல்-அமைச்சர் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதையும் செய்வார். சொல்லாததையும் செய்வார்.

இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு பேசினார்.

விழாவில், வேலூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகர அவைத்தலைவர் சூரி என்கிற கோவிந்தன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் நா. அசோகன், பகுதி செயலாளர்கள் விஜி கே.சுந்தரவிஜி, தயாள்ராஜ், பாலமுரளி கிருஷ்ணா, கணேஷ் சங்கர், மண்டலக்குழு தலைவர்கள் வீனஸ் நரேந்திரன், யூசுப்கான் மற்றும் கதிரேசன், நூருல்லா, வி.எஸ்.முருகன், அன்பு நிதி மற்றும் மாவட்ட, மாநகர தி.மு.க. நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்