விளையாட்டில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற திராவிட மாடல் தமிழ்நாடு அரசு சிறப்பான திட்டங்களை தீட்டி வருகிறது

விளையாட்டில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற திராவிட மாடல் தமிழ்நாடு அரசு சிறப்பான திட்டங்களை தீட்டி வருகிறது என்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update: 2022-08-10 00:17 GMT

சென்னை,

4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. உலகமே வியக்கும் அளவுக்கு போட்டிகளை நடத்தி முடித்துவிட்டோம். இதற்கு காரணமான, அமைச்சர் மெய்யநாதனையும், துறை சார்ந்த செயலாளர் அபூர்வாவையும், அவருக்கு துணைநின்ற அதிகாரிகளையும், அரசு அலுவலர்களையும் மனதார பாராட்டுகிறேன். உங்களுக்கு தரப்பட்டுள்ள பணியை மிக சிறப்பாக செய்துள்ளீர்கள். உங்களின் திறமை, செயலும் தமிழக அரசுக்கு மிக பெரிய பெருமையை ஏற்படுத்தி தந்துள்ளது.

சென்னையில் உங்களுக்கு (விளையாட்டு வீரர்கள்) செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்காக மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இது உங்களுடைய நாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பற்றி புரிந்துகொள்வதற்கு எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. மிகவும் உயர்ந்த இந்த மெகா செஸ் திருவிழாவில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகள் தங்களுடைய இல்லங்களுக்கு போட்டிகளின் நினைவுகளை மட்டுமல்ல, கலாசாரம், மரபு மற்றும் தமிழ் உணவின் சுவையையும் எடுத்துச்செல்வார்கள். இந்த நினைவுகளால் எப்போதும் நீங்கள் திளைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

சிறப்பான திட்டங்களை...

தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உலகத்தரமான விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டம் ரூ.25 கோடி மதிப்பில் நடைமுறைப்படுத்த உள்ளது. உலக அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்று நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை தேடி தரும் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த ஓராண்டில் 1,073 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.26 கோடியே 85 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகமான நிதிக்கொடைகள் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன கருவிகள், பயிற்சி வசதிகள் அளிப்பதற்கான திட்டத்தை பெரிய அளவில் விரிவுப்படுத்த உள்ளோம். இதன்படி 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற ரூ.60 கோடி செலவு செய்யப்படும்.

சிறப்பு நிதிஉதவி

இதேபோல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ, பாரா ஒலிம்பிக், வால்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஓபன் டபிள்யூ.டி.ஏ. சர்வதேச சாம்பியன் போட்டியை நடத்துவதற்கும், ஆசிய பீச் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். விளையாட்டு துறையில் தமிழகத்தை உலக அரங்கில் முக்கிய இடத்தை பிடிக்கவைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்போம். மேலும் நம் மண்ணின் விளையாட்டுகளை உலக அரங்குக்கு கொண்டு செல்ல கவனம் செலுத்தி வருகிறோம்.

முதல்-அமைச்சர் கோப்பை

தொடக்கவிழாவில் உங்கள் அனைவரின் முன்பும் நிகழ்த்தி காட்டப்பட்ட சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரத்தை பெற்றுத்தரவும் முயன்று வருகிறோம்.

12 ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய 2 பாரம்பரிய விளையாட்டுகளுக்கான மாநில-மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, எண்ணற்ற இளைஞர்கள் விளையாட்டை தங்கள் பாதையாக தேர்வு செய்ய உதவும். நவீன தேவைக்கேற்ப விளையாட்டு உட்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத்துறையும் முக்கியமானது என்பதை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறோம்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு பிறகு, தமிழக அரசின் விளையாட்டுத்துறையானது, முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று உறுதியளிக்கிறேன். அதற்குள் முடிந்துவிட்டதா? என்று ஏங்கும் வகையில் மிகச்சிறப்பாக இந்த போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்