தி.மு.க.வின் கொள்கைகள் தான் திராவிட மாடல்
தி.மு.க.வின் அனைத்து கொள்கைகள் தான் திராவிட மாடல் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தி.மு.க.வின் அனைத்து கொள்கைகள் தான் திராவிட மாடல் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பயிற்சி பாசறை கூட்டம்
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பேபிமகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, கதிர்ஆனந்த் எம்.பி., அமலுவிஜயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, துணைமேயர் சுனில்குமார், துணை செயலாளர்கள் ஆர்.பி.ஏழுமலை, மலர்விழி லோகநாதன், பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
திராவிட மாடல்
சுயமரியாதை, சமதர்மகொள்கை, ஜாதி இல்லாதது, அனைவரும் அர்ச்சகர் ஆகலாம், இந்திஎதிர்ப்பு, பெண்அடிமை கூடாது உள்ளிட்ட தி.மு.க.வின் கொள்கைகள் தான் திராவிட மாடல் ஆகும். தி.மு.க. கொள்கைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதற்கு நமக்கு முதலில் அவை பற்றி தெரிய வேண்டும். இதற்கு திராவிட கொள்கைகள் பற்றிய புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஒன்றியம்தோறும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும். கொள்கைகள் மற்றும் இயக்கத்தின் மீது அனைவருக்கும் ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அரசியலில் நிலைக்க முடியும்.
எம்.ஜி.ஆர். என்னிடம் அ.தி.மு.க.வில் சேர்ந்தால் அமைச்சர் பதவி தருகிறேன் என்று கூறினார். அதற்கு நான், அண்ணாவின் கருத்தை படித்து அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவன். எனவே நான் அ.தி.மு.க.விற்கு வர மாட்டேன் என்று கூறினேன். தற்போது நான் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக உள்ளேன். இந்த கட்சியை வருங்காலத்தில் இளைஞர்களாகிய நீங்கள் தான் கட்டி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனைவருக்கும் இடஒதுக்கீடு
கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், இந்த சமுதாயத்தை முன்னேற்ற பெரிதும் பாடுபட்டவர் தந்தை பெரியார் ஆவார். இடஒதுக்கீடு கொண்டுவர அவர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். பெரியாரின் முயற்சியால் தான் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருணாநிதி ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், ஆதிதிராவிடர்களுக்கு 18 சதவீதம், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம், அருந்ததியருக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைதான் தற்போதும் பின்பற்றி கொண்டிருக்கிறோம். வி.பி.சிங் பிரதமராக இருந்த சமயத்தில் ஓ.பி.சி.க்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கருணாநிதி அழுத்தம் கொடுத்தார். மத்திய அரசின் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்று கூறினார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா எம்.பி. பேசுகையில், திராவிட மாடலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் வந்தது?. எப்போது நீதிக்கட்சி, தென்னிந்திய நல உரிமை சங்கம் தொடங்கப்பட்டதோ அப்போதே திராவிட மாடல் தொடங்கி விட்டது. பிற நாடுகளில் தொழிற்திறமை பிறப்பால் நிச்சயிக்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் வர்ணாசிரமம் என்ற 4 வர்ண அடிப்படையில் பிரித்து வைத்தார்கள். இதை ஒழித்தது நீதிக்கட்சி. அதன் நீட்சிதான் சமூகநீதி. இப்போது எல்லாருக்கும் இடஒதுக்கீடு வந்துவிட்டது. அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வருவதுதான் திராவிட மாடல். திராவிட மாடலை வடநாட்டுக்கு முன்னெடுக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.