குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வாய்க்காலை சீரமைக்க வேண்டும்

ரெயில்வே அனுமதி பெற்று குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ம.க. கவுன்சிலர் மனு கொடுத்தனா்.

Update: 2022-12-03 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் நகர பா.ம.க. செயலாளரும், நகராட்சி 37-வது வார்டு கவுன்சிலருமான இளந்திரையன், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மோகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் நகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட ராகவன்பேட்டையில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெருக்களின் பின்புறத்தில் விழுப்புரம்- புதுச்சேரி ரெயில்வே பாதை செல்கிறது. இதன் ஓரமாக 2 தெருக்களில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக தண்ணீர் செல்ல வேண்டும். கடந்த ஆண்டு நகராட்சி மூலம் வடிகால் வாய்க்கால் வெட்டி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. தற்போது ரெயில்வே பாதையில் மராமத்து பணிகள் நடைபெறுவதால் வாய்க்காலை தூர்த்துவிட்டனர். இதனால் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் குடியிருப்புகளிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த வாய்க்காலை வெட்டுவதற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வாய்க்கால் வெட்ட பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்