நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் - கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறித்தியுள்ளார்.;
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.
அதன்படி நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதியில் இறங்கிய அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உயிர் பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர்.
சத்தம்கேட்டு திரண்டு வந்த கிராம மக்கள் உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது,
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏறி மற்றும் தடுப்பணைகளில் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்வ மிகுதியால் தடையை மீறி சிலர் இறங்கி குளிக்கும் போது இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றனர்.
மேலும் சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை, பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது என அவர் தெரிவித்தார்.