வேளாண் பொறியியல் துறை சார்பில் 564 பேருக்கு நலத்திட்ட உதவி மாவட்ட நிர்வாகம் தகவல்

வேளாண் பொறியியல் துறை சார்பில் 564 பேருக்கு ரூ.10.81 கோடி மானியத்துடன் ரூ.16.13 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-25 19:00 GMT

நலத்திட்ட உதவி

வேளாண்துறை சார்பில் பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு சூரிய மின்வேலி அமைக்க, எந்திரங்கள், களையெடுப்பு கருவி, துகளாக்கும் கருவி, மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்க மானிய உதவி வழங்கப்பட்டதால் விவசாயிகளின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து உணவு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் சிறிய எந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன்பெறும் வகையில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5,000 பவர் டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உழவன் செயலி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மானியம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு ரூ.85 ஆயிரம், விசை களையெடுப்பான்களுக்கு ரூ.65 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பங்களிப்பு தொகையை குறைத்து நடைமுறையில் உள்ள மானியத்துடன் மேலும் 20 சதவீதம் கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

அதன்படி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 564 பயனாளிகளுக்கு ரூ.10.81 கோடி மானியத்துடன் ரூ.16.13 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்