மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்தகுளிர்பான பாட்டில்

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்த குளிர்பான பாட்டிலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.;

Update:2023-09-28 23:29 IST

மாற்றுத்திறனாளி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்தவர் 45 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், தனது ஆசனவாயிலில் இருந்து ரத்தம் வருவதாக கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரது நடவடிக்கை இயல்புக்கு மாறாக காணப்பட்டது.

அதைதொடர்ந்து டாக்டர்கள் மாற்றுத்திறனாளியை பரிசோதனை செய்தனர். மேலும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மாற்றுத்திறனாளி வயிற்றில் பாட்டில் இருப்பதை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வயிற்றுக்குள் இருந்தது கண்ணாடியாலான குளிர்பான பாட்டில் என்பதும் தெரியவந்தது.

வயிற்றில் இருந்து பாட்டில் அகற்றம்

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி டீன் ராஜ்மோகன் ஆலோசனையின்படி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிர்மலாதேவி தலைமையில், டாக்டர்கள் குழு மாற்றுத்திறனாளியை முழு பரிசோதனை செய்து அவரது வயிற்றில் இருக்கும் பாட்டிலை எப்படி அகற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தனர்.

மேலும் அவரது உடலில் வேறு தொந்தரவு உள்ளதா என்பதையும் பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்து பாட்டிலை வெளியே எடுத்தனர். மேலும் மாற்றுத்திறனாளி வயிற்றுக்குள் எப்படி பாட்டில் சென்றது என்பது குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிர்ச்சி

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாற்றுத்திறனாளி தனது ஆசனவாயிலில் அவரே பாட்டிலை சொருகிக் கொண்டதாக சைகையிலேயே போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சைகை மூலமாக காட்டியது உண்மையா? அல்லது வேறு ஏதும் காரணமா? எப்படி அவர் வயிற்றுக்குள் பாட்டில் சென்றது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்