பெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதியாக காமராஜர் துறைமுகத்தின் ஆழம் மேலும் அதிகரிக்கப்படும் - மேலாண்மை இயக்குனர் தகவல்
பெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதியாக காமராஜர் துறைமுகத்தின் ஆழத்தை மேலும் 16 மீட்டர் அதிகரிக்கப்படும் என மேலாண்ைம இயக்குனர் தெரிவித்தார்.
சென்னை காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜே.பி.ஐரின் சிந்தியா, ராஜாஜி சாலையில் உள்ள காமராஜர் துறைமுக அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எண்ணூர் முகத்துவாரத்தை ரூ.156 கோடி செலவில் தூர்வாரும் பணி காமராஜர் துறைமுகத்தின் நிதி உதவியுடன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது மீனவர்கள் தங்களது படகுகளில் தங்கு தடை இன்றி கடலுக்கு சென்று வரமுடியும்.
அதானி தனியார் துறைமுகம் செயல்பட்டு வந்தாலும் காமராஜர் துறைமுகத்துக்கு என பல்வேறு தொழில் வாய்ப்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால் அனைத்து துறைமுகங்களுக்குமே இங்கு தேவை இருக்கிறது.
காமராஜர் துறைமுகம் 8 கப்பல் தலங்களுடன் ஆண்டுக்கு சுமார் 55 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டு 44 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
காமராஜர் துறைமுகத்தில் மேலும் ஒரு கப்பல் தளத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் பெரிய அளவிலான கப்பல்கள் வந்து செல்வதற்கு வசதியாக காமராஜர் துறைமுகத்தின் ஆழத்தை மேலும் 16 மீட்டராக அதிகரிக்கப்படும். இத்தலம் அமையும் போது மேலும் சுமார் 3 மில்லியன் டன் சரக்குகளை கூடுதலாக கையாள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.