கிணற்றில் பிணமாக கிடந்த விவசாயி
காவேரிப்பாக்கம் அருகே விவசாயி கிணற்றில் பிணமாக கிடந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் வேளாளர் தெருவில் வசித்து வந்தவர் விஜயரங்கன் (வயது 60) விவசாயி. இவரது குடும்பத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை விஜயரங்கனின் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் துர்நாற்றம் வீசியது. அந்த வழியே சென்றவர்கள் கிணற்றில் எட்டிபார்த்தபோது விஜயரங்கன் கிணற்றில் பிணமாக மிதந்தார்.
உடனே இதுகுறித்து அவர்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.