நாளை மறுநாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் நடக்கிறது.;

Update:2024-02-21 22:58 IST

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாத்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் 23-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்