நாளை மறுநாள் 44 புறநகர் ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (25ம் தேதி) 44 புறநகர் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை,
கோடம்பாக்கம் தாம்பரம் ரெயில் நிலையம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
கோடம்பாக்கம் தாம்பரம் ரெயில் நிலையம் இடையே பிப். 25-ல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை -அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மறுவழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை11.30, நண்பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரெயில்கள் ரத்து காரணமாக சிறப்புப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.