14 ஆண்டுகளுக்கு பிறகு 71 அடியை எட்டிய வைகை அணை

தொடர் மழையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது.

Update: 2022-10-22 17:13 GMT

தொடர் மழையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது.

தொடர் மழை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.

இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த 17-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் அன்றைய தினம் இரவில் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.

70 அடியை எட்டியதும் அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இருந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்பட்டது.

71 அடியை எட்டியது

இதற்கிடையே இன்று மாலை 3 மணி அளவில் வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் 7 பெரிய மற்றும் சிறிய மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து தற்போது வினாடிக்கு 1,817 கன அடியாக உள்ளது. அந்த தண்ணீர், அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

வைகை அணை கடந்த 2008-ம் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அணையின் பாதுகாப்பு கருதி முழு கொள்ளளவு 69 அடியாக நிலைநிறுத்தப்பட்டது. 69 அடியை எட்டியதும் வைகை அணையில் இருந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியது.

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை தற்போது எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்