இலவச திட்டங்களால் நாடு ஒரு புள்ளி அளவு கூட வளராது; திருச்சியில் சீமான் பேட்டி
இலவச திட்டங்களால் நாடு ஒரு புள்ளி அளவு கூட வளராது என்று திருச்சியில் சீமான் கூறினார்.;
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரே விமானத்தில் திருச்சிக்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியே காத்து இருந்த இரு கட்சியினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக விமான நிலைய போலீசார் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக சீமான் நேற்று காலை திருச்சி வந்தார். கோர்ட்டில் ஆஜரான பிறகு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச திட்டங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என்று யாராவது நிரூபிக்க முடியுமா?. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மனச்சான்றுடன் பேச வேண்டும். இலவசங்களால் இழக்கிற பணத்தை எங்கிருந்து கொண்டு வருவீர்கள். மத்திய-மாநில அரசுகளின் கடன் சுமை பல மடங்கு அதிகரித்துவிட்டது. பின்னர் எதற்கு இலவசம் என்ற பெயரில் வெற்று அறிவிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். இலவச திட்டங்களால் நாடு ஒரு புள்ளி அளவு கூட வளராது. இங்கு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்குவது மிகப்பெரிய துயரம். பா.ஜ.க.வும், காங்கிரசும் இருவேறு கட்சிகளாக இருந்தாலும் கொள்கை ஒன்று தான். இந்துக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக தற்போது காங்கிரசும் அதற்கான நாடகத்தை தொடங்கியுள்ளது. வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் வீடு இல்லாத மக்கள் எங்கே போய் கொடி ஏற்றுவார்கள். சுதந்திர கொடியை கையில் பிடிக்கிற தகுதி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.