கொப்பரை கொள்முதல் இலக்கு 7 ஆயிரம் மெட்ரிக் டன்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் இலக்கு 7 ஆயிரம் மெட்ரிக் டன் என உயர்த்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.;
சுல்தான்பேட்டை
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் இலக்கு 7 ஆயிரம் மெட்ரிக் டன் என உயர்த்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கொப்பரை கொள்முதல்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 15 லட்சத்து 60 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. இதில் பறிக்கப்படும் தேங்காய், இளநீர் ஆகியவை திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைக்கப்பட்டு கொப்பரைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகம் கொண்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோயில் ஆகிய பகுதியில் உள்ள வெளிமார்க்கெட்டுகளில் கொப்பரை கொள்முதல் விலை குறைவாக இருந்ததால், சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரையை வினியோகிக்க ஆர்வம் காட்டினர்.
அதிகரிக்க வேண்டும்
இங்கு அரவை கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். ஆனால் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கு நிறைவடைந்தவுடன் கொப்பரை வாங்குவது நிறுத்தப்பட்டது.இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-
வெளிமார்க்கெட்டில் தற்போது கொப்பரை கொள்முதல் விலை (நேற்று முன்தினம்) கிலோ ரூ.78 ஆக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.82 ஆக இருந்தது. அவ்வப்போது விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தோப்பு பராமரிப்பு செலவு, உரச்செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த கொள்முதல் விலை கட்டுப்படியாகாது. எனவே அரசு கொள்முதல் நிலையமான செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ கொப்பரையை குறைந்தபட்சமாக ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் கொப்பரை உற்பத்தி அதிகரித்து உள்ளதால், இலக்கை குறைந்தபட்சம் 7 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்து கொள்முதலை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.