பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும்

மயிலாடுதுறையில் அரசு அலுவலகங்களில் கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.

Update: 2023-02-17 18:45 GMT

மயிலாடுதுறையில் அரசு அலுவலகங்களில் கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.

அலுவலகங்களில் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உதவி கலெக்டர் அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகம், நில அளவைத்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், 'மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பொது மக்களிடமிருந்து வரப்பட்ட பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் வரப்பட்டதன் அடிப்படையில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது? எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன? நிலுவையில் உள்ள மனுக்களுக்கு எப்போது தீர்வு காணப்படும்? என கேட்டறிந்து விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

பத்திரப்பதிவு அலுவலகம்

தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பொது மக்களிடம் இருந்து வரப்பட்ட தகவல்கள் தொடர்பான பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, நில அளவை துறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு, பொதுமக்களிடம் இருந்து உட்பிரிவு பட்டாவிற்கு எத்தனை மனுக்கள் வரப்பட்டன? எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன? என கேட்டறிந்து நிலுவையில் உள்ள மனுக்களை இன்னும் ஒருசில தினங்களில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. மேலும் மனுக்கள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.

பத்திரப்பதிவு துறை அலுவலகத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, பொது மக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய முறையில் உடனடியாக தீர்வு காணவும், பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட பத்திரப்பதிவாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்