கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-16 21:09 GMT

திருக்காட்டுப்பள்ளி:

மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ஆற்றில் புதிதாக மணல் எடுக்க உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கல்லணை பஸ் நிலையப் பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு வந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும், இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இதை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

29 பேர் கைது

அப்போது 3 இளைஞர்களின் கழுத்தில் மாலை போட்டு, ஆற்றில் படுக்க வைத்து கோஷங்கள் எழுப்பினர். மூதாட்டி ஒருவர் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒப்பாரி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முகில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சதீஸ்குமார், கார்த்திக், தங்கமணி, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டு ஆற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 29 பேரை தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப் இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை மற்றும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 10பெண்கள் உள்பட 29 பேர் மீது தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்