9 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

வத்திராயிருப்பு பகுதியில் 9 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-14 19:57 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு பகுதியில் 9 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலையில்லா திண்டாட்டம்

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும், மத்திய அரசை பதவி விலக கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

வத்திராயிருப்பில் நடந்த மறியலுக்கு தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டம்

முத்தாலம்மன் திடல் மைதானத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் ஒரு வங்கி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல் வ.புதுப்பட்டியில் மாநில குழு உறுப்பினர் ராமச்சந்திரபாபு தலைமையில் 11 பெண்கள் உள்பட 36 பேரும், மகாராஜபுரத்தில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி தலைமையில் 52 பெண்கள் உள்பட 94 பேரும், கோட்டையூரில் மாவட்ட குழு உறுப்பினர் அம்மாசி தலைமையில் 14 பெண்கள் உள்பட 20 பேரும், கூமாபட்டியில் பேரூர் செயலாளர் துவான்ஷா தலைமையில் 31 பெண்கள் உள்பட 58 பேரும், காடனேரி கிராமத்தில் தாலுகா துணை செயலாளர் தர்மராஜ் தலைமையில் 7 பெண்கள் உள்பட 26 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

500 பேர் கைது

குன்னூரில் தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம் தலைமையில் 19 பேரும், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் பேரூர் செயலாளர் பால்ராஜ் தலைமையில் 36 பெண்கள் உள்பட 48 பேரும், கிருஷ்ணன் கோவிலில் ஒன்றிய துணை செயலாளர் செல்வம் தலைமையில் 37 பெண்கள் உள்பட 49 பேரும் மறியலுக்கு முயன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்