ஆய்வுக்கு சென்றபோது அங்கன்வாடி மையத்தில் இரவில் தங்கிய கலெக்டர்

ஆய்வு பணிக்கு சென்ற திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஜவ்வாதுமலையில் உள்ள அங்கன்வாடியில் இரவில் தங்கினார். பள்ளி மாணவர்களுக்கு பாடமும் நடத்தினார்.;

Update: 2023-02-10 16:54 GMT

கலெக்டர் ஆய்வு

ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் பகுதியில் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும், ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் மத்திய அரசு மையத்திலும் ஓய்வு விடுதிகள் பிரமாண்டமான அளவில் உள்ளது. இந்த ஓய்வு விடுதிகளில்தான் கலெக்டர்கள் முதல் அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள் இங்கு வந்தால் இரவு தங்குவார்கள்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வுசெய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாலை மிட்டூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பீமக்குளம் ஊராட்சி மந்தாரகுட்டை கிராமத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வகுப்பில் மாணவர்களின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

அங்கன்வாடியில் தங்கினார்

அப்போது அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை கற்பித்தார். தொடர்ந்து மலைப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அவர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பின்னர் அதே பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு தங்கினார். மாவட்ட கலெக்டர் மலைப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கியது இதுவே முதல் முறையாகும்.

கலெக்டர் ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சம்பத், வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் மேகலா திருப்பதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்