நரிக்குறவ மாணவியை தனது இருக்கையில் அமரவைத்த கலெக்டர்
கலெக்டர் ஆகவேண்டும் என விருப்பம் தெரிவித்த நரிக்குறவ இன மாணவியை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தனது இருக்கையில் அமரவைத்து ஆலோசனை வழங்கினார்.;
கலெக்டர் இருக்கையில்
திருப்பத்தூர் அருகே உள்ள பாச்சல் கிராமம் இதயம் நகர் பகுதியில் வசித்து வரும் 53 நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை அமைச்சர் எ.வ.வேலு சமீபத்தில் வழங்கினார். அதைத்தொடர்ந்து நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் பாஸ்கரபாண்டியனை கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது 10-ம் வகுப்பு பயிலும் நரிக்குறவர் இன மாணவி மெய்விழி நான் எதிர்காலத்தில் கலெக்டராக வரவேண்டும் என்று தன்னுடைய ஆசையை கலெக்டரிடம் தெரிவித்தார். அதனை கேட்ட கலெக்டர் உடனடியாக தனது இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து, ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து 13 நாட்களில் 48 நபர்களுக்கு நரிக்குறவர் பழங்குடியினர் சான்றும், 5 நபர்களுக்கு குருவிக்காரன் (எஸ்.டி) பழங்குடியினர் சான்றும் வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மற்றும் வருவாய்துறையினருக்கு நரிக்குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
சமுதாயத்தை உயர்த்த வேண்டும்
மாவட்டத்தில் உள்ள கடைக்கோடியில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றோம். அனைத்து நலத்திட்டங்களும் பெற முடியும், உங்களது பிள்ளைகளை மருத்துவராகவும், பொறியாளராகவும், ஐ.ஏ.எஸ். ஆகவும் ஆக்க முடியும். சான்றிதழ் வழங்குவதற்கு முக்கிய நோக்கம் அனைவரும் கல்வி கற்க வேண்டும். நீங்கள் உங்களின் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.
அனைவரும் சிறப்பாக படித்து உங்களுடைய சமுதாயத்தை உயர்த்த வேண்டும். முக்கியமாக பெண் கல்வி என்பது மிக மிக முக்கியம். குழந்தை திருமணத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் தான் நரிக்குறவர், பழங்குடியினர் சான்றும், குருவிக்காரன் (எஸ்.டி.) பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை வழங்கி இருக்கின்றோம். அரசின் சலுகைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் நரிக்குறவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.